அடையாள அட்டை இல்லாதோர் உடனடியாக விண்ணப்பிக்கவும்

0

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தை, கிராம சேவையாளரூடாகப் பெற்று, உடனடியாக விண்ணப்பிக்குமாறு, யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு, தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (07) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ​தொடர்ந்துரைத்த அவர், தேர்தலில் வாக்களிப்பதற்குச் சமூகமளிக்கும் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தை சமர்ப்பித்து தனது வாக்களிப்பை மேற்கொள்ள முடியுமெனவும் இத்தகைய எந்தவோர் ஆவணமுமில்லாத ஒருவர், தற்காலிகமாகத் தேர்தல் திணைக்களத்தால் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியுமெனவும் கூறினார்.

அதேபோல, ஜூலை மாதம் 29ஆம் தேதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்களத் தரவுத்தளத்தில் உட்சேர்க்கப்படுகின்ற தகவல்களைக் கொண்டு உறுதிப்படுத்திய கடிதத்தை, தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்கும் ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதெனவும், அவர் தெரிவித்தார்.

எனவே, தேசிய அடையாள அட்டை இல்லாத அனைத்து வாக்காளர்களும் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதிக்கு முன்னர் தங்களுக்குரிய அடையாள அட்டைக்குரிய விண்ணப்பத்தை, ஆட்பதிவுத் திணைக்களத்தில் விண்ணப்பித்து, தங்களுக்குரிய ஆள்அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அமல்ராஜ் தெரிவித்தார்.