கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவருவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் மே 11 திங்கட்கிழமை முதல் வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி இதன்போது விரிவாக ஆராய்ந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அரச, தனியார் துறையின் அனைத்து சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது விசேடமாக குறிப்பிட்டுள்ளார்.
நிறுவன செயற்பாடுகள் குறித்து விரிவான திட்டங்களை சுகாதாரத் துறைகளுக்கு முன்வைக்குமாறும் அறிவிக்கப்பட்டது.
பொது போக்குவரத்து நடவடிக்கைகளை உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியனார்.
நிறுவனங்களை நடத்திச் செல்லும் போது ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பது சேவைகள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நிறுவன கட்டமைப்புக்கு ஏற்ப பணி முறைமாற்றங்களை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடையாள அட்டை, கடவுச் சீட்டு மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டது.
வலய கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கிராமிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகளை கண்டறியவும் தீர்மானிக்கப்பட்டது.
மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், விவசாயம், கட்டிட நிர்மாணம் போன்ற அபிவிருத்தி பணிகள் ஏனைய மாவட்டங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மே 11 ஆம் திகதி முதல் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் மாவட்டங்களிலும் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட முடியும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் தொடர்பாக எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.