நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே இன்று நண்பகல் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நாள் குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் மலையத்தின் சில பகுதிகளில் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலையினை தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்தும் சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், இவ்வாறானவர்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.