ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரை!

0

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று (புதன்கிழமை) உரை நிகழ்த்தவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமானது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு குறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இடம்பெறுகின்றது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இலங்கை நாட்டையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் உரையாற்றவுள்ளார்.

அதேநேரம், நாளை இடம்பெறவுள்ள உணவுக் கட்டமைப்புக் கூட்டத்தொடரிலும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள எரிசக்தி தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலிலும் பங்கேற்று ஜனாதிபதி கருத்துகளை முன்வைக்கவுள்ளார்.

இதனிடையே இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகைத்தந்துள்ள ஏனைய நாடுகளின் அரசத் தலைவர்களுடனும் ஜனாதிபதியும் குழுவினரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.