கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 16 பேர் விடுவிப்பு!

0

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து எஞ்சிய 16 விமான பயணிகள் இன்று(வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

அந்தவகையில்  வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமுக்கு விமான பயணிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, லண்டன், கனடா, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த  16 பேர் இன்று வன்னி கட்டளை தளபதி மேயர் ஜெனரல் ரோகித தர்மசிறி தலைமையில்  விடுவிக்கப்பட்டிருந்தனர்.

நோய் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் அனைத்து விமானப் பயணிகளும் வைத்திய பரிசோதனை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.