கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளமை நேற்று(வியாழக்கிழமை) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 47 வயதான ஆணொருவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குருணாகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான ஆணொருவரே கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் சிறுநீரக நோய் என்பன என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 57 வயதான பெண்ணொருவரும் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக சிறுநீரக நோய் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 53 வயதான ஆணொருவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் குருதி விசமடைந்தமை என்பன என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 670 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 663 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 127 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 901 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 741 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.