கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை தனக்கு செலுத்தி சோதனை செய்து கொள்வதற்கு விரும்புவதாக மொஸ்கோவுக்கான இலங்கை தூதுவர் எம்.டி. லமாவங்ஷ ( Meegahalande Durage Lamawansa ) தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக Meegahalande Durage Lamawansa மேலும் கூறியுள்ளதாவது, “நான் இலங்கையிலிருந்து மாஸ்கோ வந்தவுடன், எதிர்காலத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பெற தயாராக இருக்கிறேன்.
இந்த தடுப்பூசியானது தற்போது, 3 ஆம் கட்ட சோதனைகள் வழியாக செல்கிறது. அதில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்’ என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முதல் முதலில் தடுப்பூசியை பதிவு செய்த நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.
குறித்த நாடு தற்போது, 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.
ரஷ்ய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஸ்பூட்னிக் வி பாதுகாப்பானதும் வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் திறன் கொண்டதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்பூட்னிக் 5 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் நிறைவுபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.