சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இடமில்லை…!

0

கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள சகல நாடுகளும் செயற்பட்டு வருகின்ற நிலையில் வளர்சிகண்டுவருகின்ற நாடுகளுக்கு உதவும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நெருக்கடிகளை சந்திக்கும் நாடுகளுக்கு கடன் உதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நாடுகளில் இலங்கை உள்வாங்கப்படவில்லை.

இதில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து  மறுசீரமைக்கப்பட்ட பேரழிவு கட்டுப்பாடு மற்றும் நிவாரண அறக்கட்டளையின் கீழ் அதன் உறுப்பு நாடுகளில் சிரமப்படும் நாடுகளுக்கான நிதி நிவாரண உதவிகளை வழங்க நேற்று முன்தினம் சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் வழங்கியது.

அவ்வாறான நாடுகளுக்கு அடுத்த ஆறுமாத காலத்திற்கு அவர்களின் கடன் மற்றும் பொருளாதார தன்மைகளை மீட்டெடுக்க  சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக மானியங்களை வழங்கவும், மேலும் பல உதவிகளை முன்னெடுக்கவும், அவசர மருத்துவ மற்றும் பிற நிவாரணங்களை வழங்கவும்  இவ்வாறு 25 நாடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக  சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் இவ்வாறு கடன்  நிவாரணங்களை  பெறும் நாடுகளாக ஆப்கானிஸ்தான், பெனின், புர்கினா பாசோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், கொமொரோஸ், கொங்கோ, டி.ஆர்,  காம்பியா, கினியா, கினியா-பிசாவு, ஹைட்டி, லைபீரியா, மடகஸ்கர், மலாவி, மாலி, மொசாம்பிக், நேபாளம், நைஜர், ருவாண்டா, சாவோ டோமே மற்றும் பிரின்சிப், சியரா லியோன், சொலமன் தீவுகள், தஜிகிஸ்தான், டோகோ மற்றும் ஏமன் ஆகிய நாடுகளே இவ்வாறு நிதி உதவிகளை பெரும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இலங்கை இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. இலங்கையின் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பாக கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் இலங்கை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருப்பினும் கொரோனா வைரஸ் சவால்களில் இருந்து விடுபட முன்னெடுக்க வேண்டிய வேலைதிட்டங்களுக்காக  உலக வங்கியினால்  இலங்கைக்கு 128 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இம்மாதம் இரண்டாம் திகதி இந்த நிதிக்கான அங்கீகாரம் வழங்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.