கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு அரசாங்கத்தால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்பானது எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, பரிசுமல்ல எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இது எமது உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இதனை நாங்கள் வெற்றியாகவோ அல்லது கிடைத்த பரிசாகவோ கருதவில்லை.
இது எங்களுடைய உரிமையாகும். அவர்கள் இந்த உரிமையை எப்போதோ கொடுத்திருக்க வேண்டும். இந்நிலையில், அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்தும் கிடைக்கவும் உரிமையை அடைவதற்காகவும் எங்கள் போராட்டத்தை நாம் தொடர்வோம்.
நாடாளுமன்றத்திற்குள்ளும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இதற்கு எதிராக நான் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தேன். 20இற்கு ஆதவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்தனர். எனினும், நானும் இதுகுறித்து தொடர்ந்தும் குரல் எழுப்பியிருந்தேன்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போதும்கூட நாம் இதுகுறித்து பலமானதொரு செய்தியினை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.