நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடித்தால், நாட்டில் சட்டம் இல்லாமல் போய், சட்ட நிர்வாகமும் அழித்து பயங்கரமான நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ அமரசூரிய கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்தும், இலங்கையின் சட்ட நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலைமைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு, சமையல் எரிவாயு, அத்தியவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு, அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாமை, வெளிநாட்டு பணத்தை அனுப்ப முடியாமை, சில சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையை கீழ் நோக்கி தரப்படுத்தியுள்ளமை, சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டமை, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சேவையை நிறுத்தியமை, எதிர்காலத்தில் ஏற்பட போகும் மின்சார பிரச்சினை தொடர்பான எச்சரிக்கை என்பன மூலம் அரசாங்கம் இனியும் தாமதமின்றி பொருளாதார நெருக்கடிக்கு பதிலை காண வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளன.
மேலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாட்டின் நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆதிபத்தியம் என்பவற்றுக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் இலங்கை சட்டத்தரணிக்ள சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சட்ட நிர்வாகம் முற்றாக வீழ்ச்சியடையும் ஆபத்தும் இருக்கின்றது எனவும் சட்டத்தை மதிக்காத அராஜக நிலைமையை நோக்கி நாடு செல்லக் கூடும் அந்த சங்கம் கூறியுள்ளது.
இப்படியான நிலைமை ஏற்படும் முன்னர், தற்போது காணப்படும் பாரிய முரண்பாடுகள் காரணமாக இலங்கை குடிமக்கள் தமது தனிப்பட்ட மற்றும் பொது உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பும் வரையறுக்கப்படும்.
அதிகளவில் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள சமூகத்தினர் கூடுதலான ஆபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டில் தற்போது 3 பில்லியன் அந்நிய செலாவணி கையிருப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கடனை திரும்ப செலுத்த எவ்வளவு பணம் செலவாகும் என்பதும், வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பணம் கைமாற்று உடன்படிக்கை ஊடாக பெறப்பட்டுள்ளது என்பதையும் உறுதியாக கூற முடியாமல் உள்ளது.
சர்வதேச தரப்படுத்தல், இக்கனோமிஸ்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி மாத்திரமல்லாது, இலங்கை வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஆகியவற்றை மேற்கோள்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளது.
இதனை தவிர தமது சங்கத்தின் உறுப்பினர்களில் பலர் சுயத்தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களும் இந்த நெருக்கடியின் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் இலங்க சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஆலோசனைகளை பெற்று அதனடிப்படையில் செயற்படுமாறும் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.