பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

0

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்த அதேவேளை, 40 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச்செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி தீவிரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துமாறு குறித்த தீர்மானத்தினூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கும், அவர்களை தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவும் அதிகூடுதல் அதிகாரங்கள் காணப்படுகின்றது.

அத்துடன், பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதோடு, பாலியல் சித்திரவதைகள், மற்றும் இனவாத சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் மனித உரிமைகள் மீதான கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பேண்தகு தன்மை மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.