பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன்

0

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என இயன்றவரை இலங்கை அரசாங்கம் போராடி வருகின்ற நிலையில் அவர்களுடன் இணைந்து ஒரு சில தமிழ் தரப்புக்களும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பிரேரணையில் வலு கிடையாது பிரயோசனமற்றது என கூறி வாக்களிக்கும் நாடுகளின் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தி வருவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

சர்வதேச தளம் ஒன்றில் இலங்கையை தொடர்ந்தும் மேற்பார்வை செய்வதாக இருந்தால் இந்த பிரேரணை நிச்சம் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி நாளைய தினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என்ற நல்ல செய்தியை மக்கள் அறிவார்கள் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.