புனித ஹஜ் திருநாள் இன்றாகும்!

0

தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் விசேட தொழுகைகளில் ஈடுபட்டனர்.

உலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.

இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதிபடைத்த முஸ்லிம்கள், இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்ககானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.

இற்றைக்கு சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதர் இப்றாஹிம் நபி அவர்களின் மனைவியான சாரா மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகன் இஸ்மாயில் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை, இறைக் கட்டளையின் பிரகாம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவுகூறப்படுகின்றது.

நபி இப்றாஹிம் அலைஹிஸ்சலாம் அவர்கள் தமது அன்புக்குரிய மகன் இஸ்மாயில் அலைஹிசலாம் அவர்களை பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் அதனை தடுத்து, ஓர் ஆட்டை இறக்கி அதனை பலியிடுமாறு கட்டளையிடப்பட்டார்.

இறைதூதர் இப்றாஹிம் அலைஹிசலாம் அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்த தினத்தில் ஹஜ் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் உழ்ஹிய்யா கடமையையும் நிறைவேற்றுவார்கள்.