மட்டக்களப்பில் 3 கட்சிகளினதும் 3 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

0

பொதுத் தேர்தல் 2020 இற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளினதும் 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்கள் 44இல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 இனதும் சுயேட்சைக் குழுக்கள் 3 இனதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகருமாகிய கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, மௌபிம ஜனதா பக்ஸ, ஜனசத பெரமுன ஆகிய 3 அரசியல் கட்சிகளும் அரசரத்தினம் யுகேந்திரன், பி. மதிமேனன், மு.அ. நிசார்தீன் ஆகியோர் தலைமையிலான 3 சுயேச்சைக் குழுக்களுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதனடிப்படையில் 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களுமாக 38 குழுக்கள் இத்தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளன.

மேலும் வேட்புமனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சத்தியப்பிரமானம் சமர்ப்பிக்கப்படாமை, வேட்பு மனுவில் எட்டு அபேட்சகர்களது பெயர் குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில், 7 அபேட்சகர்களது பெயர்கள் மாத்திரம் குறிப்பிட்டமை போன்ற காரணங்களுக்காகவே இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.