மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக அமுல் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நகரின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது.
போக்குவரத்துகள் வழமைபோன்று இடம்பெற்றுவருவதுடன் மக்கள் பயணம் செய்யும் தொகை மிகவும் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது. இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் தனியார் பேருந்துகளும் சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றன.
மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் சமூக இடைவெளியை பேணுதல் மாஸ்க் அணிதல் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை மேற்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு பொதுச்சந்தை தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பொதுச்சந்தை வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேநேரம் மதுபானசாலைகள் இன்று காலை திறக்கப்பட்டதை தொடர்ந்து மதுபான சாலைக்கு முன்பாக கூட்டம் அதிகமான நிலையில் காணப்பட்டதுடன் சமூக இடைவெளிகளும் பேணப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.