முதற்தடவையாக அமைச்சரவை கண்டியில் பதவிப்பிரமாணம்! கோலாகல ஏற்பட்டில் தலதா மாளிகை வளாகம்

0

அரசாங்கத்தின்புதிய அமைச்சரவை இன்று கண்டியில் பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 8.30 மணியளவில் ஆரம்பிக்கவுள்ள இந்த நிகழ்வானது இலங்கையில் முதன் முறையாக அமைச்சரவையொன்று தலதா மாளிகையில் பதவிபிரமானம் செய்துக் கொள்ளவுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த நிகழ்வை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளனர். இலங்கையில் தலதா மாளிகையில் அமைச்சரவை பதவியேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென அஸ்கிரிய பீடம் தெரிவித்தது.

அமைச்சரவையின் எண்ணிக்கை , அமைச்சு உள்ளடங்கும் நிறுவனம் மற்றும் தொடர்பான சட்டம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு , பொருளாதார அபிவிருத்தி , உட்கட்டமைப்பு அபிவிருத்தி , கல்வி , சுகாதாரம் , விளையாட்டு மற்றும் தொழிநுட்பத்துறை விருத்தி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இம்முறை அமைச்சரவை 28 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அமைச்சரவை அமைச்சொன்றில் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட 40 இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளன. இதே வேளை இம்முறை பிரதி அமைச்சு நியமனம் பற்றி எவ்வித கருத்தும் வெளிப்படுத்தப்படவில்லை.

பாதுகாப்பு

நாளை இடம்பெறவுள்ள பதவிப்பிரமான நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலதா மாளிகை வளாகத்தில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு கண்டி நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாற்று போக்குவரத்து ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னேற்பாடுகள்

கண்டி – தலதா மாளிகையின் மகுல் மலுவ வளாகத்திலேயே புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமான நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த பகுதியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வர்ணங்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.