மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள்

0

மே தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளன.

பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பனவற்றின் ஏற்பாட்டில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதேபோல, ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளதுடன், கடந்த 26ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் கொழும்பிலுள்ள பிரதான கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் புதிய நகர மண்டப வளாகத்தில் இடம்பெறவுள்ளதுடன், ஜே.வி.பி. இன்றைய தினம் 4 இடங்களில் மே தின கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் பிரதான மே தின ஊர்வலம் இன்று பிற்பகல் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டரங்கில் ஆரம்பமாகி பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.

இது தவிர, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் ஜே.வி.பியின் மே தின கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டம் கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அந்தந்த தோட்டங்களிலும் பிரதேசங்களிலும் மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

இது தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான மே தினக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கபப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.