தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக சர்வதேச ரீதியில் நிதி திரட்டுதல் உள்ளிட்ட உதவிகளை வழங்கும் நபர்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவு, இரகசிய பொலிஸார், சர்வதேச பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வரும் நபர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக செயற்படுகின்றமை சட்டவிரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, சர்வதேச பொலிஸார் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுடனும் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
வெளிநாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கும் நபர்கள் மற்றும் அவர்களுடன் இலங்கையர் யார் யார் தொடர்புகளை பேணி வருகின்றனர் என்பது தொடர்பிலும் ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்புகளை பேணுவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தகவல்கள் அத்தியாவசியமானவை எனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.
மேலும், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவோர் குறித்து, பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறுகின்றார்.
மாவீரர் தினத்தை இணைய வழியின் ஊடாக அனுஷ்டித்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் நான்கரை வருடங்களாக புலனாய்வு பிரிவு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், குறித்த காலப் பகுதியில் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து செயற்படாமையினால், விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் சுதந்திரமான செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அவ்வாறான நபர்களுக்கு எதிராக தான் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.