நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் இணைத்து விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக புதிய பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
இந்த செயற்பாடுகள் அனைத்து அரசாங்க அதிபர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவட்ட செயலாளர்களுடன் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலாளர்கள் வழங்கிய ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக தெரிவித்த ஜனாதிபதி அதற்கு தனது பாராட்டுக்களை குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கினார்.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. பொருளாதார ரீதியாக பலம்பெறுவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக விவசாயத்திற்கு முன்னுரிமையளித்து தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மாவட்ட மட்டத்தில் சுதேச கைத்தொழில்கள் மற்றும் ஏனைய உற்பத்தி கைத்தொழில்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்காக தொழில்முயற்சியாளர்களை வலுவூட்ட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு முழுமையான உதவியை அரசாங்கம் என்ற வகையில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மீன்பிடி கூட்டுத்தாபனம் போன்று விவசாய அறுவடைகளை கொள்வனவு செய்வதற்கு மரக்கறி கூட்டுத்தாபனம் போன்றதொரு நிறுவனத்தின் தேவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அறுவடைக்கு பிந்திய தொழிநுட்ப நிறுவனம் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் பரிந்துரைகளை மக்களுக்கும் விவசாய சமூகத்தினருக்கும் பிரபல்யப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு நடைமுறை நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிக்கவும் இணக்கம் காணப்பட்டது.
தற்போதைய நிலையில் பெரும்பாலனவர்கள் விவசாயிகளிடம் கொள்வனவு செய்யும் விவசாய உற்பத்திகளை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இது பயனுள்ள நடவடிக்கை என சுட்டிக்காட்டிய மாவட்ட செயலாளர்கள் இதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மாவட்ட மட்டத்தில் குளிரூட்டிகள் மற்றும் களஞ்சிய நிலையங்கள் மற்றும் சுதேச விதை உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் குறிப்பிட்டனர்.
தரிசு நிலங்களில் பயிர்ச்செய்தல், விவசாயம் செய்யப்படாத நிலங்களை பாதுகாப்புத் துறை மற்றும் சிறைக் கைதிகளின் பங்களிப்புடன் பயிரிடல், உப பயிர்களை பயிரிடல், வயல்நிலங்களை அண்மித்து பயிரிடக்கூடிய பயிர்கள் குறித்து விவசாயிகளை வலுவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இறப்பர் உற்பத்தி, தும்புக் கைத்தொழில், நெசவு உள்ளிட்ட சுதேச கைத்தொழில்களை கட்டியெழுப்புதல், பசும் பால் உற்பத்தியை ஊக்குவித்தல் உள்ளிட்ட விவசாய மற்றும் கைத்தொழில் துறைகளின் அபிவிருத்தி குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சரவையின் செயலாளர் எஸ். அமரசேக்கர, நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆடிகல, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்ன ஆகியோரும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.