அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு அரசாங்கம் ஆலோசனை!

0

மக்களுக்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று(செவ்வாய்கிழமை) காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் அதிகளவிலானவர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய ஒன்றுகூடியிருந்தனர்.

இது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பாரிய தடையாக அமைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையிலேயே எதிர்காலத்தில் மக்களுக்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சதோச, கீல்ஸ், லாப்ஸ், ஆர்பிக்கோ, புட் சிற்றி, அரலிய, நிபுண மற்றும் ஏனைய மொத்த விற்பனை நிறுவனங்களை இந்த நடவடிக்கையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் திட்டத்தை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக பசில் ராஜபக்ஷ தலைமையில் செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் , மாவட்ட அரசாங்க அதிபர்கள் , பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாவர்.

அத்துடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் மருந்து எரிவாயு உள்ளிட்ட ஏனைய சேவைகளையும் தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

லொறி, வான், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்ற அனைத்து விநியோக வாகனங்களும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.