அரசாங்கத்தை அமைக்கும் உரிமை போல், அந்த அரசாங்கத்தில் தவறுகள் இருக்குமாயின் அவற்றை விமர்சிக்கும் உரிமையும் மக்களுக்கு இருக்க வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் சிலர், ஆனந்த தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது சிலர் எம்மை தவறான விதத்தில் பார்க்கின்றனர். நாங்கள் எப்போதும் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதாக சிலர் கூறுகின்றனர்.
இதனால், எமது வாய்களை மூட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். எனினும் எங்களது வாய்களை மூடிவிட முடியாது.
எமது வாய்களை மூட நினைப்பவர்களை எமக்கு தெரியும். கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வார்கள் என்றால், நாங்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஆனால், அரசாங்கத்தின் தவறுகளை எம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. நாங்கள் கூறுவதை பல கோணங்களில் பார்க்க வேண்டாம் என நான் கூறுகிறேன் எனவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.