ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில், அதற்கான பொறுப்பை வேறொரு தரப்பிடம் கையளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி, நியாயத்தை பெற்றுக் கொடுப்பதாகவே ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்ததாக அவர் கூறினார்.
நாளாந்தம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளினால், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை பின்னோக்கி தள்ள வேண்டாம் என தான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இனவாத செயற்பாடுகளின் ஊடாக எதிர்காலத்தில் தாக்குதல்களை நடத்தாது, தடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு நித்திரைக் கொள்ளக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த குண்டுத் தாக்குதலுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்ட தரப்பினர் தொடர்பில் கண்டறிவதற்கு தைரியமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காகவும், டீல் கலாசாரமொன்றை ஏற்படுத்திக் கொள்ளவதற்காகவும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற விதத்தில், இந்த சம்பவத்தின் பின்னணியை மறைக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் தன்னிடம் உறுதியளித்ததாகவும் அவர் கூறுகின்றார்.
தனக்கு வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றும் என தான் இன்றும் நம்புவதாக கூறிய அவர், அதனை தவறவிடும் பட்சத்தில் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என குறிப்பிடுகின்றார்.
இதன்படி, அதற்கான பொறுப்பை வேறொரு தரப்பிடம் கையளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார்.