அலட்சியம் ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்- சீ.வீ.கே.

0

கொரோனா வைரஸ் தொடர்பாக அலட்சிய கொண்டிருந்தான அது பெரும் ஆபத்தில் முடியும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், “உயிர்க் கொல்லி நோயான கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுநோய் இதுவரை உலகெங்கிலும் பல்லாயிரம் உயிர்களைக் காவுகொண்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளும் இந்தத் தொற்று நோய்த் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றன.

பல்லாயிரக் கணக்கானவர்களை இத்தொற்று நோய் காவு கொள்ளக்கூடும் என்ற எதிர்வுகூறல்கள் எல்லோரையும் அச்சமடையச் செய்கின்றது. எமது நாட்டிலும் இதுவரை 90 இற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முறையான தடுப்பூசிகளோ, மருந்துகளோ இன்றும் காணப்படாத நிலையில் நாம் ஒவ்வொருவரும் அரச நிர்வாகத்தினராலும் வைத்தியத் துறையினராலும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்தல் கட்டாயமாகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இப்பொழுது ஒருவர் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இங்கு தற்செயலாக இந்நோயின் தாக்கம் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் என்ற அரச மருத்துவ சங்கத்தினரின் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் நாமாகவே சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு அறிவுரைகளை முறைப்படி பின்பற்றுதல் கட்டாயமானது. ஒவ்வொருவரும் அறிவுரையின்படி செயற்பட்டால் முழு நாட்டையும் இந்த ஆபத்திலிருந்து பாதுகாத்துகொள்ள முடியும்.

வைத்திய நிபுணர்களும் அதிகாரிகளும் எவ்வளவுதான் அறிவுரைகளை வழங்கினாலும் மக்களின் பின்பற்றுதலிலேயே வெற்றி தங்கியுள்ளது. இன்றைய நிலையில் அலட்சியம் ஆபத்தானது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

போதுமான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுவிட்டாயிற்று. அவற்றைப் பின்பற்றுவது மக்களது பொறுப்பாகும். பொறுப்போடு செயற்பட்டு எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என எல்லோரையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.