அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பிரதான நடைமுறைகள் குறித்த அறிவிப்பு

0

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பிரதான நடைமுறைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலும் எமது நாட்டிலும் பரவி பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவவதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த ஆபத்தான தருணத்தில் முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளை வேலைத் தளங்களில் கட்டாயமாகப் பின்பற்றுவதனை உறுதிசெய்து கொள்வதன் மூலமாகவே எம்மையும் எமது சமூகத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் பின்வரும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

1. பணியாளர்கள், பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குரிய வழிகாட்டுதல்களை அலுவலக வாயிலில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.

2. வேலைத் தளத்தினுள் நுழைவதற்கு முன்பு பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கைகளைச் சரியான முறையில் சவர்க்காரமிட்டுக் கழுவுதல் அல்லது தொற்று நீக்கியைப் பாவித்து தூய்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்கவும்.

3. இதற்காக அலுவலகத்தின் நுழைவாயிலிலும் பொருத்தமான ஏனைய இடங்களிலும் கை கழுவும் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் அல்லது தொற்று நீக்கி பாவனையை உறுதி செய்தல் வேண்டும்.

4. அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மையாகப் பேணுவதுடன் அலுவலகத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொதுப் பயன்பாட்டு இடங்கள் மற்றும் தளபாடங்கள், கதவுக் கைபிடிகள், படிக் கைபிடிகள், இலத்திரனியல் உபகரணங்களைப் பொருத்தமான தொற்று நீக்கியைப் பாவித்து கிரமமாக அடிக்கடி தூய்மைப்படுத்தலும் வேண்டும்.

5. கூடுமானவரை அலுவலகத்தின் கதவுகள், ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கவும்.

6. சேவை வழங்கும் இடங்களில் சேவை பெறுநர்களின் எண்ணிக்கையை அலுவலகத்தின் உள்ளேயும் வெளியிலும் மட்டுப்படுத்துவதுடன் அலுவலகப் பணியாளர்கள், சேவை பெறுநர்களுக்கிடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

7. கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிந்து கடமையாற்றுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

8. மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியுடன் சேவைகளை ஒழுங்குபடுத்துவதோடு வேலை நேரங்களை பணியாளர்களுக்கு பொருத்தமான வகையில் அதிகளவானோர் ஒரே நேரத்தில் ஒன்று கூடாதவாறு தீர்மானித்தல் வேண்டும்.

9.பணியிடங்களில் ஒன்றுகூடல்களின்போது முக்கியமான அங்கத்தவர்கள் மாத்திரம் பங்குபற்றுவதையும் போதிய தனிநபர் இடைவெளியையும் உறுதிப்படுத்தல் வேண்டும். ஒன்றுகூடலின் பின் குறித்த பகுதி உடனடியாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

10. ஒவ்வொரு சேவைகளையும் குறித்தொதுக்கப்பட்ட தினங்களிலும் நேரங்களிலும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதுடன் பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

11. பணியாளர்கள் தமக்கு கொவிட்-19 நோயின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டைநோவு போன்ற அறிகுறிகள் சிறிதளவேனும் இருந்தால் கடமைக்கு சமூகமளிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தவும். என அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.