ஆட்சி நீடித்தால் ஆப்கான் நிலைமையே ஏற்படும்

0

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தொடருமாக இருந்தால், ஆப்கானிஸ்தான் – காபூல் நகரில் மக்கள் விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவதை  போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “தற்போது அமைச்சரவை மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது, இதனை பார்க்கும் போது சீட்டுக் கட்டு விளையாட்டு நினைவுக்கு வருகின்றது.

இதில் கோமாளிகள் இரண்டும் இருக்கும். அந்த இரண்டு கோமாளிகளையும் ஒதுக்கிவிட்டே சீட்டுக்கட்டு பிரிக்கப்படும். அதேபோன்று தான் தற்போது அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது அமைச்சு மாற்றப்பட்டதற்காக ஒப்பாரி வைக்கின்றார்.

அவருக்கே தெரியாது அவரது அமைச்சுப்பதவி பறிபோனதாக தெரிவிக்கின்றார். கோமாளிகளே இவ்வாறான தீர்மானம் எடுத்துள்ளனர். இந்த நாட்டை ஆட்சி செய்வதும், தீர்மானங்கள் எடுப்பதும் கோமாளிகள் என்றே கூற வேண்டும்.

அதேபோல் பலி கொடுப்பது குறித்தும் அவர் கதையொன்றை கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து நாட்டு மக்களையே பலிகொடுத்து வருகின்றனர்.

தற்போது காபூலில் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்வதை போன்று எதிர்கலாதில் இலங்கையிலும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்லும் நிலை உருவாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.