இந்தியாவிடம் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது

0

இந்தியாவின் 200 மில்லியன் டொலர் இரண்டாவது கடன் வசதியின் கீழ் கிடைத்துள்ள இறுதியான எரிபொருள் கப்பல் எதிர்வரும் வியாழக்கிழமை (16) கொழும்பை வந்தடையவுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ள போதிலும், இந்தியா அனுமதி வழங்கியுள்ளமை குறித்து இதுவரை எவ்வித விடயங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தியாவின் EXIM வங்கியிடமிருந்து இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெறுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கான உரிய பொறிமுறை உருவாக்கப்படாத நிலையில், மக்களின் அன்றாட பொழுதுகள் பெரும்பாலும் வீதிகளிலேயே கழிகின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களை போலவே இன்றும் நீண்ட வரிசைகளை காண முடிகின்றது.

இதனிடையே, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ள நிலையில், மாற்றீடான சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாத நிலையில், வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.