தமிழ் அரசியல் கட்சிகளின் சந்திப்பு இன்று (15) இடம்பெறவுள்ளது.
தியாகி திலீபனின் நினைவுநாளில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும்- முதற்கட்டமாக கட்சிகளின் தலைவர்கள் அல்லது செயலாளர்கள் ஒன்றாக சந்திக்கும் தீவிர திரைமறைவு முயற்சிகள் நடந்து வருவதாக சில நாட்களின் முன்னர் வெளியிட்டிருந்தது.
26ஆம் திகதியளவில் சந்திப்பை நடத்தலாம் என்ற எண்ணத்துடன் இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்தன.
தமிழ் கட்சிகள் இனியும் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது, தமிழ் தேசியப் பரப்பில் இயங்குவதாக தம்மை பிரகடனப்படுத்தியுள்ள கட்சிகளாவது முதலில் ஒன்றுசேர வேண்டுமென தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த முயற்சியில் முன்கையெடுத்து செயற்பட்டது இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் என்றுதான் இப்போதைக்கு சொல்லலாம்.
இந்த நிலையில் திடீரென நினைவேந்தலை தடுக்கும் முடிவை அரசு எடுத்து, நேற்றே அடக்குமுறை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்க- இயல்பாகவே தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய காலத்தேவை உருவானது.
இதனால் திட்டமிட்ட திகதிக்கு முன்னதாகவே சந்திப்பு இடம்பெறும் ஏதுநிலை ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை மாவை சேனாதிராசாவே இந்த முயற்சியை முன்கையெடுத்து செயற்படுத்த ஆரம்பித்தார். பிற கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்களுடன் தொலைபேசியில் பேசி நிலைமையை விளக்கினார்.
மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை தடுக்கும் அரசின் ஜனநாயக படுகொலை நடவடிக்கையை எதிர்கொள்ள அனைத்து தரப்பும் ஒன்றித்து செயற்படுவோம் என அழைப்பு விடுத்தார்.
இன்று யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளது. மதியத்தின் பின்னரே சந்திப்பு நடக்குமென தெரிகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். மணிவண்ணன் தரப்பினரும் கலந்து கொள்வார்கள்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பாக இன்று காலை எம்.கே.சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு tamilceylon வினவியது.
“மாவை அண்ணை நேற்றிரவு தொலைபேசியில் விடயத்தை தெரிவித்தார். நான் எமது கட்சி தலைவர் சிறிகாந்தாவுடன் ஆலோசித்தேன். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளுடனும் ஆராய வேண்டும். விக்னேஸ்வரனின் வழக்கு விசாரணைக்காக அனந்தி கொழும்பு சென்று விட்டார்.
அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். சுரேஷ் பிரேமச்சந்திரனுடனும் பேசி ஒரு முடிவை மாவை அண்ணனிற்கு தெரியப்படுத்துவேன்“ என்றார்.