2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் எலெக்ஸ் மார்செல் பதிலளித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப்போட்டி தொடர்பில் முன்வைக்கப்படும் அண்மைய கால குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.சி.சி.யின் ஒருமைப்பாட்டு பிரிவு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் தம்மிடம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே, ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் ஆரம்பிக்க தேவையான உறுதியான எந்தவொரு ஆதாரமும் தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை என எலெக்ஸ் மார்செல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஐ.சி.சி.க்கும் மற்றும் ஐ.சி.சி.யின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய எந்த கடிதமும் மேற்குறித்த விடயத்தை உறுதிப்படுத்தில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்ற விதத்தை சந்தேகிக்க வேண்டிய எந்த காரணமும் இல்லை என்வும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் முறைப்பாட்டாளர்களுடன் ஒத்துழைத்து தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த போட்டி அல்லது வேறு ஏதேனும் போட்டிகள், போட்டி நிர்ணயத்திற்கு உட்பட்டது என்பதற்கு யாரிடமாவது ஆதாரம் இருந்தால், ஐ.சி.சி.யின் ஒருமைப்பாட்டு குழுவை தொடர்புக் கொள்ளுமாறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் எலெக்ஸ் மார்செல் கேட்டுக்கொண்டுள்ளார்.