இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழ் அகதிகள்! – ஐநாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ் அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

நாடுகடத்தப்பட்ட தமிழ் அகதிகள் சிறிலங்கா விமானநிலையத்தில் வைத்து, சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்தே இந்தக் கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

இது குறித்து ஐ.நாவின் அகதிகளுக்கான உயராணையாருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

உலகில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சிறிலங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐ.நாவின் அறிக்கையொன்றில் உள்ளது.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா. உள்நாட்டு மறுஆய்வு அறிக்கையின்படி, 2009 ஆண்டின் இறுதிப்பபோரின் இறுதி ஆறு மாதங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் உள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினாரால் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட தமிழ் அகதிகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் சிறிலங்கா இராணுவ மற்றும் உளவுத்துறையிடமிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளை, சந்திக்கவும், அவர்களை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவில் உள்ள ஐ.நா அதிகாரிகளை வேண்டுமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயராணையாளரிடம் கோரியுள்ளார்.

முன்னராக தமிழ் அகதிகளை நாடுகடத்த வேண்டாமென ஜேர்மன் வெளிவிகார அமைச்சருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.