இலங்கை தீவில் கொடூரத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு: எம் உறவுகளை ஆத்மார்த்தமாக நினைவு கூருவோம்.!!

0

இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது.

நாட்டு மக்களை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய இந்த கோரத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ரணங்கள் இன்றும் ஆறாத வடுவாகவே ஆழ்மனங்களில் பதிந்துள்ளன.

இந்த தாக்குதல்களில் அவயங்களை இழந்து, உறவுகளை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் துன்பத்தில் பங்கெடுத்து நாட்டு மக்களும் அந்த ரணங்களை நினைந்து ஓராண்டு நினைவை ஆத்மார்த்தமாக நினைவுகூரும் வேளை இதுவாகும்.

ஆம்! கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியான இதேநாளில் உயிர்த்த ஞாயிறு புனித நாளில் எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்றதும், இலங்கை மக்களை உலுக்கிய கோரச் சம்பவமாகவும் மாநகர் கொழும்பு மற்றும் ஏனைய சில நகரங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கை வரலாற்றில் பதிவாகின.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று புத்தாடைகளை அணிந்து தேவாலயங்களுக்கு மக்கள் சென்ற வேளை, இலங்கையின் இயற்கை அழகில் இலயித்திருக்கலாமென்ற ஆவலில் இலங்கைக்கு வந்து விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் உணவருந்த கூடிநின்றவேளை அவர்களின் அவா அனைத்தும் அந்த காலை நேரத்தில் நொடிப்பொழுதில் சிதறிப் போயின.

அன்றைய நாளில் காலை 8.45 மணிமுதல் 9.15 மணி வரையிலான குறுகிய நேரத்திற்குள் இலங்கையின் வர்த்தகத் தலைநகரான கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் மூன்றிலும் இந்தத் தொடர் குண்டுவெடிப்புக்கள் நடந்தன.

முதலாவது தாக்குதல் நீர்கொழும்பு, புனித செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்றதுடன் அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தாக்குதல் கொழும்பு, புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்டது நிலையில் அங்கு 50இற்கும் அதிகமானோர் மரணித்தனர்.

மூன்றாவது தாக்குதல் நாட்டின் கிழக்கு தேசமான மட்டக்களப்பு நகரில் சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 30இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதேவேளையில், கொழும்பு கிங்ஸ்பெர்ரி, சினமன் கிரான்ட் மற்றும் சங்ரி-லா ஆகிய ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடித்தன.

இதனைவிட, பிற்பகல் வேளையில், கொழும்பின் தெற்குப் புறநகரான தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு அருகிலுள்ள ‘ட்ரப்பிக் இன்’ என்ற விடுதியில் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, கொழும்பின் பல பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் குண்டுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தியபோது குண்டுகள் வெடித்ததில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள், வயோதிபர்கள், இளையோர் என 39 வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 253 பேர்வரை கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் பலரின் உடல்கள் அடக்கம்செய்யப்பட்ட நாளான ஏப்ரல் 23ஆம் திகதி இலங்கையில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.

தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னரும் காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள அதேவேளை, அவயங்களை இழந்தவர்கள் இன்றும் கதியற்ற நிலையில் வாழ்கின்றனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட பயங்கர குண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் இனங்காணப்பட்டனர். தாக்குதல்கள் குறித்து ஆராய குழுக்கள் நியமிக்கப்பட்டன. விடுதிகள் மற்றும் தேவாலயங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டன. தற்போது விடுதிகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. தேவாலயங்களில் ஆராதனைகள் இடம்பெறுகின்றன.

குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ள போதிலும் இலங்கை மக்களின் வடுவாக உள்ள இந்த துன்பியல் சம்பவம் இன்றும் வலிகளால் நிறைந்து மனங்கள் கனத்து நிற்கின்றன.

என்றபோதும், இழந்த உறவுகளை நினைவுகூரும் இந்நாள் மற்றுமொரு இக்கட்டான சூழலில் அமைந்துள்ளதால் அனைவரும் ஆத்மார்த்தமாக நினைவுகூர்ந்து இல்லங்களில் தீபங்கள் ஏற்றி மரணித்த மக்களை நினைவு கொள்வோம்..!!