தெற்காசிய நாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணி நிறைவு பெற்றிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இந்தியாவின், கொல்கத்தாவிலிருந்து 125 இலங்கை மாணவர்களை ஏற்றிக்கொண்ட யு.எல். 1188 விமானம் கடந்த 30 ஆம் திகதி மாலை நாட்டை வந்தடைந்தமையுடன், தெற்காசியப் பிராந்தியத்தைத் தளமாகக் கொண்ட 1065 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமான நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்கு காரணமாக இலங்கைக்கு மீளத் திரும்புவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்திய இலங்கை மாணவர்களை மீள அழைத்து வருவதற்காக, ஏப்ரல் 21 ஆம் திகதி முதல், மொத்தமாக ஒன்பது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சிறப்பு விமானங்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாடு திரும்பிய அனைவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகளிலான கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், ஜனாதிபதி செயலகம், கொரோனா பணிக்குழு மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடனான நெருக்கமான ஒத்துழைப்புடன் மாணவர்கள் பாதுகாப்பாக வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் தலைவரான பணிப்பாளர் நாயகம் அருணி ரணராஜ இந்தப் பணிகளை தூதரகங்களுடன் ஒருங்கிணைத்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டிற்கு மீள அழைத்து வரல் மற்றும் தனிமைப்படுத்தல் செயன்முறைகள் ஆகிய இரண்டையும் நெறிப்படுத்தும் விரிவான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.