ஊரடங்கு வேளை பொலிஸார் மீது வாள்வெட்டு – இருவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கையில் காயமடைந்துள்ளார்.

வலி.வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை இரவு 10 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான சென்றிருந்தது. அவர்கள் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது பொலிஸ் உப பரிசோதகர் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

அதனை அடுத்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ஏனைய பொலிசார், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த மேலதிக பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸ் அதிகாரி மீது வாள் வெட்டினை மேற்கொண்ட இருவரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருவதுடன், குழு மோதலில் ஈடுபட்ட ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.