தனக்கெதிரான விமர்சனங்களே தனது வளர்ச்சிக்கு காரணம் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இம்முறை மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே தமிழ் மக்கள் சிந்தித்து தங்களது வாக்குளை செலுத்துவார்கள்.
நான் சில இடங்களுக்குச் செல்லும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்வியினை கேட்பார்கள். அதற்கு நான் பதில் வழங்குகின்ற போது எனது கடந்த கால அரசியல் செயற்பாடுகள் குறித்து விமர்சிப்பார்கள்.
இவ்வாறு எனக்கெதிரான விமர்சனங்களே எனது வளர்ச்சிக்கு காரணம். எனவே தயவு
செய்து என்னை தொடர்ந்தும் விமர்சியுங்கள். இப்படி நீங்கள் என்னை விமர்சித்தால் என்னால் இம்முறை தேர்தலில் வெற்றிபெற முடியும்.
காலை வேளையில் நான் செய்திகளை பார்க்கின்ற போது எனக்கெதிரான விமர்னசங்கள் எவையும் வரவில்லை என்றால், அது எனக்கு மிகந்த கவலையாக இருக்கும்.
அதாவது முதல் நாள் நான் ஒழுங்காக செயற்படவில்லை என்பதே அதற்கான அர்த்தமாக காணப்படுகின்றது. எனவே என்னை தொடர்ந்தும் விமர்சியுங்கள்.
நான் இங்கு வந்த பின்னர்தான் யோசித்தேன், நான் தற்போது அணிந்துள்ள நீலச்சட்டை கூட ஒரு விமர்சனமாக முன்வைக்கப்படலாம்.
எனவே என்னை விமர்சியுங்கள். நீங்கள் என்னை விமர்சிக்காவிட்டால் எனது பெயர் மக்கள் மத்தியில் குறைவாகத்தான் பேசப்படும்.
அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்விக்கு அண்மையில் வேத்துச்சேனையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
அங்குள்ள மக்கள் யாரை நம்பியிருக்கின்றார்கள் என்பதனை மக்கள் அவர்களுடைய
செயற்பாடுகள் ஊடாக நன்றாக காட்டியிருந்தார்கள்.
அதேபோன்று நான் இனவாதி இல்லை. என்னிடம் இன துவேசம் இல்லை“ எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.