கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில்

0

தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், அரசியல் குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம் மற்றும் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படும் என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசனை கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்தமைக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்சியின் தலைவரான தன்னிடம் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.