இன்று சில பெண்கள் அணிகின்ற ஆடைகளினால் ஆண்கள் பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. இவர்கள் ஆடை அணிந்திருக்கின்றார்களா? இல்லையா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
இவ்வாறு ஆடை அணிபவர்களை எவரையும் கருத்தில் கொள்ளவில்லை மாறாக இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடுவது தவறேன் கூறுகின்றனர்.
இது இஸ்லாமியர்களை பழிவாங்குவதற்காக வெறுமனே இவ்வாறன பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சபையில் தெரிவித்தார்.
ஆண்-பெண் சமநிலை தொடர்பிலான பாராளுமன்ற பெண்கள் தெரிவுக்குழு அமைப்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே இந்த கருத்துக்களை இவர்கள் முன்வைத்தனர். அவர் மேலும் கூறுகையில்,
தற்போது, பெண்களின் உடை பற்றி பேசப்படுகின்றது. குறிப்பாக, முகத்தை மூடக்கூடாது எனவும், அது நாட்டுக்கு பாரிய ஆபத்து எனவும் பலவந்தப்படுத்த எண்ணுகின்றார்கள்.
முகத்தை மூடத்தான் வேண்டுமென நான் இங்கு வலியுறுத்தவில்லை. பெண்களை பொறுத்தவரையில், அவர்களின் ஆடையை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
அத்துடன், இன்று சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. இவர்கள் ஆடை அணிந்திருக்கின்றார்களா? என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
இவ்வாறு இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், இதற்கு மாற்றமாக, இஸ்லாமியர்களை பழிவாங்குவதற்காக வெறுமனே இவ்வாறன பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். அதுமாத்திரமின்றி, சில எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார்கள்.
அதேபோன்று, திருமணச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென கூறப்படுகின்றது. மாற்றங்கள் என்பது காலத்திற்கு ஏற்ப தேவையான ஒன்றாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அமைச்சரோ, அரசாங்கத்திலிருக்கும் ஒரு சிலரோ இதனை செய்து விட முடியாது.
இஸ்லாமிய அறிஞர்கள், புத்திஜீவிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இவற்றை மேற்கொள்ள வேண்டுமெ தவிர, இரவோடு இரவாக இதனை செய்து விட முடியாது. முஸ்லிம்கள் அரசுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, பழிவாங்கும் நோக்குடன் இவ்வாறு செய்ய முடியாது.
நபி (ஸல்) பெருமானார் நபியாக வருவதற்கு முன்னர், அந்த நாட்டிலேயே பெண்களை உயிருடன் குழிதோண்டிப் புதைத்தார்கள். அந்தக்காலத்தில் பெண்களுக்கு எந்த மரியாதையும் வழங்கப்படவில்லை. பெருமானார், நபியான பின்னர் தான் பெண்களுக்கான மரியாதையையும் கெளரவத்தையும் வழங்கினார்கள்.
”தாயின் காலடியிலேயே தான் சுவர்க்கம் இருக்கின்றது” என்று பெருமானார் கூறினார்கள். கணவன் நிச்சயமாக மனைவியின் கடமையை செய்ய வேண்டும். மனைவியின் உரிமைகளை வழங்க வேண்டும் என்பதும், பெருமானாரின் வருகைக்கு பின்னர் சட்டதிட்டங்களாக கொண்டுவரப்பட்டது.
அத்துடன், பெண்கள் கல்வி கற்க வேண்டும் எனவும் பெருமானார் வலியுறுத்தினார்கள்.எனவே, மார்க்கத்தை சரிவர தெரிந்துகொள்ளாதவர்கள், இஸ்லாமியர் மீது வெறுப்புணர்வு கொண்டவர்களுமே தேவையற்ற விடயங்களை பேசித் திரிகின்றார்கள் என்பதை வேதனையுடன் தெரிவிக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.