போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வு, நாளைய தினமும் முற்பகல் 9.30 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
நீதித்துறை சார்ந்த பல்வேறு அரச திணைக்களங்களில், பொதுமக்கள் சேவை பெறும் நோக்கில், இந்த நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த நீதியமைச்சர் அலிசப்ரி, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.