கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல்செய்யவே சில கட்சிகள் முயற்சி- சாணக்கியன்

0

கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள் தங்களது பலத்தினை கொண்டுசெல்ல வேண்டுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும்.

மேலும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என்பது சர்வதேச ரீதியாகவும் இலங்கை ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

அத்துடன் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமே தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுகளை நடாத்துகின்றது.

ஆகவே இம்முறையும் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெற வேண்டும். அப்போதுதான் எங்களது பேரம்பேசும் சக்தியை அதிகரிக்க முடியும்.

இதேவேளை கிழக்கு தொல்பொருள் செயலணி தொடர்பாக அங்குள்ள தமிழ் மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க தூதுவரும்  சந்தேகத்தினை வெளியிட்டிருந்தார்.

ஆனால் இந்த விடயம் தொடர்பாக, கிழக்கினை மீட்கப்போகின்றோம், கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோம் என்று கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல்செய்ய முனையும் இந்த அரசியல்கட்சிகள் இதுவரையில் எந்தவித கருத்துகளையும் வெளியிடவில்லை.

இத்தகையவர்கள், எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை கோர முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.