கைது நடவடிக்கை கட்டாயம் தொடரும் – அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை

0

தடை செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை கவனத்தில் கொள்ளாது அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கட்டாயம் கைது செய்யப்பவார்கள் என பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக எந்த தளர்வுகளும் காட்டப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்ட பின், தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற சம்பவமானது மனித உரிமை மாத்திரமல்லாது தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கும் எதிரானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் வீரசேகர, கைது செய்யப்படும் நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதை மாத்திரமே பொலிஸார் செய்வார்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவுக்கு அமைய அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்களே அழைத்துச் செல்வார்கள் எனக் கூறியுள்ளார்.

எனினும் இது முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அந்த இடத்தில் எந்த பொது சுகாதார பரிசோதகரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் வேண்டும் என்றே பிணை வழங்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் அவர் இதனை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.