கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவல் மக்களை அதிகம் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதன் காரணமாக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே நாம் பொதுத் தேர்தலைக்கூட பிற்போட நேர்ந்தது.
அவ்வாறு இருக்கையில் இந்த காலகட்டத்தில் தேர்தல் சட்டத்தை மீறும் விதத்தில் அரசியல் கட்சிகள் செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
இது எந்தளவு மோசமான தூரம் சென்றுள்ளது என்றால் மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் கூட அரசியல் இலாபம் பெறப்படும் விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் வகையில் இவர்கள் செயற்படுகின்றனர்.
அரச அதிகாரிகள் மூலமாக பொதுமக்களுக்கு சமுர்த்தி நிதி பங்கிடப்படுகின்ற நேரங்களில் அவர்களுடன் இணைந்து அரசியல் பிரதிநிதிகள் தமது கட்சியையும் சின்னத்தையும் பிரசித்திபடுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது கீழ்மட்ட அரசியல் வாதிகள் மட்டுமல்லாது உயரிய மட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் கூட இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் வேதனைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
இது குறித்து நாம் மிகவும் அதிருப்தியில் உள்ளோம். அதிருப்தியடைவது மட்டுமல்ல இந்த செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது.
இந்த கால எல்லைக்குள் அரசியல் பக்கசார்புகளை கைவிட்டு பொதுவான வேலைத்திட்டம் ஏதேனும் இருப்பின் அதனை கையாள வேண்டும் எனவும் நாம் ஏற்கனவே சகல தரப்பையும் அறிவுறுத்தியுள்ளோம்.
அதுமட்டும் அல்லாது நகரசபைகளில், மாகாணசபைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் செயற்பாடுகளில் கூட முழுமையாக அரசியல் தலையீடுகள் உள்ளது.
இவ்வாறு மக்களின் இக்கட்டான சூழ்நிலையிலும் அரசியல் செய்ய முயற்சிப்பதன் மூலமாக எமது நாடு எந்த திசையில் பயணிக்கின்றது என்பதை உணர முடிகின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.