கொரோனா அச்சுறுத்தல் – உலகம் முழுவதும் 2 இலட்சத்தை நெருங்கும் மரணங்கள்!

0

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் நிலையில் அங்குமட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் மரணங்கள் 2 இலட்சத்தை நெருங்குகின்றன.

கடந்த 24 மணிநேரங்களில் 85 ஆயிரத்து 434 புதிய நோயாளர்கள் உலகம் முழுவதும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 27 இலட்சத்து 25 ஆயிரத்து 487 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 6 ஆயிரத்து 618 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 57ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 7 இலட்சத்து 45 ஆயிரத்து 824 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 342 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 50 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று மட்டும் அங்கு புதிய நோயாளர்கள் 31 ஆயிரத்து 900 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 8 இலட்சத்து 86 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 259 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், நேற்று குறித்த நாடுகளில் 3 ஆயிரத்து 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று 28 ஆயிரத்து 925 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்தமாக 11 இலட்சத்து 93 ஆயிரத்து 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 3 இலட்சத்து 76 ஆயிரத்து 38 பேர் குணமடைந்துள்ளனர்.

குறித்த நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வந்தநிலையில் நேற்று கணிசமாக உயிரிழப்புக்கள் குறைந்துள்ளன.

அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 464 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 25 ஆயிரத்து 549 ஆகப் பதிவாகியுள்ளன.

மேலும், நேற்று புதிய நோயாளர்கள் 2 ஆயிரத்து 646 பேர் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 973 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை பதிவாகியுள்ளது.

இதனைவிட, ஸ்பெயினில் நேற்று 440 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் மொத்த மரணங்கள் 22 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளன.

அத்துடன், புதிய நோயாளர்கள் 4 ஆயிரத்து 635 ஆக உள்ளதுடன் இதுவரை 2 இலட்சத்து 13 ஆயிரத்து 24 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 90 ஆயிரம் பேர்வரை குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து, பிரான்ஸில் கடந்தவாரங்களை விட குறைந்திருந்தாலும் கடந்த 5 நாட்களாக 500 வரையான உயிரிழப்புக்கள் பதிவாகிவருகின்றன. இந்நிலையில் நேற்று 516 ஆக மரணங்கள் பதிவாகியுள்ளன.

பிரான்ஸில் மொத்தமாக 21 ஆயிரத்து 856 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 183 பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வைரஸால் நேற்று மட்டும் 638 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 18 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 583 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 78 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட, ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 300 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று 260 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளன.

மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று 228 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த மரணங்கள் 6 ஆயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளன. அங்கு 42 ஆயிரம் பொருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட, நெதர்லாந்தில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் ரஷ்யாவில் 42 பேரும், சுவீடனில் அதிகபட்சமாக 84 பேரும் நேற்று மரணித்துள்ளனர். அத்துடன் பிரெஸிலில் நேற்று 407 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, அமெரிக்க நாடான கனடாவில் நேற்று 173 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளன.

ஆசியாவில் நேற்று 358 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் துருக்கியில் 115 பேர் மரணித்துள்ளதுடன் ஈரானில் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பேரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 10 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த 5 நாட்களாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.