கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நாம் இது குறித்து தீவிரமாக கலந்துரையாடினோம்.
உண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், குறிப்பாக கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நாடுகளில் இருந்து மார்ச் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதிக்குள் வந்த பலர் சுய தனிமைபப்டுத்தலுடன் கூடிய தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படாது நடமாடி வருகின்றனர்.
உண்மையில் இது எமது நாட்டு மக்களின் ஒழுக்கம் சார் பிரச்சினை. சுகாதார சேவைகள் அதிகாரிகள், அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அவர்கள் அதனை கணக்கில் கொள்ளாமல் செயற்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்து அதிகமான இடமாக புத்தளம் மாவட்டம் உள்ளது. இத்தாலியில் இருந்து, மார்ச் முதலாம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாத பலர் புத்தளம் முழுவதும் உள்ளனர்.
அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் சுகாதார அலோசனைகளை புறக்கணித்தால் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான போக்கு வரத்து உள்ளிட்டவை முடக்கப்படலாம்.
அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் பொறுப்பற்று செயற்பட்டால் முடக்கல் குறித்த செயற்பாட்டுக்கு நாம் தள்ளப்படலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.