கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடன் போதைப் பொருட்கள் கடத்தல்- மூவர் அதிரடி கைது!

0

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்துக்கு லொறியில் அத்தியாவசியப் பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற மூவரை இன்று (வெள்ளிக்கிழமை) கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியில், கொழும்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று ஏற்றப்பட்டு மட்டக்களப்பிற்கு எடுத்துக்கொண்டுவந்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த லொறி மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு வாழச்சேனை பொலிஸ் நிலையத்துக்குள் கொண்டுவரப்பட்டு பொருட்களை வெளியில் இறக்கி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, குறித்த அத்தியாவசிய பொருட்களுடன் 13 கிராம் 20 மில்லிலீற்றர் ஜஸ்போதைப் பொருளும், 6 கிராம் 960 மில்லிக்கிராம் கஞ்சாவும், 104 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருட்களை மீட்டதுடன் லொறி சாரதி மற்றும் இரண்டு உதவியாளர்கள் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் லொறி ஒன்றையும் அத்தியாவசிய பொருட்களையும் கைப்பற்றினர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.