கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க நகரங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை

0

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை வௌியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் Zoom தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, இந்த ஆலோசனைக் கோவை வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மேல் மாகாணத்தில் கொழும்பு வலயம், அதனை அண்மித்த நகரங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களில் உள்ள பிரதான நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் குறித்த நாட்களில் பாடசாலைகளை நடத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதான நகரங்கள் தவிர்ந்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் உகந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச மட்டத்தில் குறைந்தளவிலான மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு போக்குவரத்து சிரமங்கள் ஏற்படாவிடின், அவ்வாறான பாடசாலைகளை நடத்திச்செல்வதற்கும் மாகாணக் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் ஒன்லைன் ஊடாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்காக, காலை 08 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்வெட்டை அமுல்படுத்தாமலிருக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆற்றும் தன்னார்வ சேவை பாராட்டப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வார நடவடிக்கைகளுக்கு அமைவாக அடுத்த வாரம் சனிக்கிழமை மாகாணக் கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக, எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென கல்வியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.