நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாயினையும் கடந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி தாபிக்கப்பட்டது.
வங்கிக்கு நேரடியாக வைப்பிலிடப்பட்ட 9.5 மில்லியன் ரூபாய் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாய் அன்பளிப்பு என்பவற்றுடன் 145 மில்லியன் ரூபாய் நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருந்தது.
மக்கள் வங்கியின் நிதி முகாமைத்துவ கணக்குகள் திணைக்களம் 9.5 மில்லியன் ரூபாய், மக்கள் வங்கி ஓய்வூதிய சங்கம் 03 மில்லியன் ரூபாய், பீபல்ஸ் லீசிங், லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வங்கி என்பனவற்றின் தலா 5 மில்லியன் ரூபாய், தேசிய சேமிப்பு வங்கி 8 மில்லியன் ரூபாய் மற்றும் அக்பர் பிரதர்ஸ் பிரைவற் லிமிடட் நிறுவனம் அன்பளிப்பு செய்த 50 மில்லியன் ரூபாயுடன் வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.
சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354354 என்ற இலக்கத்தின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) திரு. கே.பீ எகொடவெலேவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.