செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை!

0

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து தெளிவுபடுத்தும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

எனினும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தளர்வடையவில்லை என்றால் இலங்கையில் அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்று நாம் எண்ணவில்லை.

நாம் அவதானித்ததன் படி இத்தாலியிருந்து வருகை தந்தவர்களினால் ஏற்பட்ட பிரச்சினை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இதேவேளை இந்தோனேஷியா, டுபாய் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்றுக்கு உள்ளானோர் மற்றும் அவர்களுடன் பழகியவர்களே தற்போது இனங்காணப்பட்டு வருகின்றனர்.

நோயாளர்களை இனங்காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு அதிகரிக்கப்படும் அளவிற்கேற்ப நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள். இது சிறந்த முறையாகும். உண்மையில் பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

இலக்கு வைக்கப்பட்டுள்ள குறித்தவொரு குழுவினை இனங்காணுவதற்காக  பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

தற்போதுள்ள நிலைவரத்துக்கு அமைய நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படவில்லை. எனினும் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதை மீண்டும் கூறுகின்றேன்.

அதன் காரணமாகவே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தும் சமூக இடைவெளி தொடர்பில் மக்கள் அனைவரும் அவதானத்தில் கொள்ள வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.