கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் வாக்குமூலமளிக்க வருகை தர வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று பிடியாணை பிறப்பித்தார்.
சந்தேகநபர் தாம் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகமான அயேஷா ஜினசேன நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைத்தார்.
பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி சந்தேநபர் தங்கியிருந்த வெள்ளவத்தை, வத்தளை, பத்தரமுல்லை, நுகேகொடை, உடாஹமுல்ல ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை சோதனைக்கு உட்படுத்திய போதும் அவர் அங்கிருக்கவில்லை என மேலதிக மன்றாடியார் நாயகம் அயேஷா ஜினசேன நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினார்.
இதன்காரணமாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு அவர் கோரினார்.
இதனை ஆராய்ந்த போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த பிடியாணையை பிறப்பித்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.