தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் இன்று – நாட்டின் பல பகுதிகளிலும் விசேட பூஜை வழிபாடுகள்!

0

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியாக விசேட பூஜை வழிபாடுகளும், பொங்கல் பொங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக தைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமிக்கும், விவசாயத்திற்கு உதவியமைக்காக மாட்டுக்கும், இவற்றுக்கு ஒளி பாய்ச்சி அருளித்தமைக்காக சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டு தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் இன்று பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

யாழ் மக்கள் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு இன்று விசேட பொங்கல் நிகழ்வும் விசேட பூஜையும் நடைபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகாதார வழிமுறைகளுடன் ஆலயத்தில் தைப்பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வவுனியாவிலும் பொங்கல் தின நிகழ்வுகள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டன.

விவசாயத்தைக் தமது ஜிவனோபாயமாகக் கொண்டு வாழும் மக்கள் அதிகமாக உள்ள வவுனியா மண்ணில் வீட்டிலும், தொழில் ஸ்தாபனங்களின் முற்றத்திலும், ஆலயங்களிலும், அரச மற்றும் தனியார் திணைக்களங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

மாவிலைத் தோரணம்கட்டி, கோலமிட்டு, கலாச்சார ஆடைகள் அணிந்து புதுப்பானையில் பொங்கி பட்டாசு கொளுத்தி மக்கள் இதன்போது மகிழ்ந்தனர்.

அNதுநேரம். தைத் திருநாளை முன்னிட்டு முல்லைத் தீவில் இந்து ஆலயங்களிலும்,  கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மலையக மக்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை இன்று சிறப்பாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்ம ஸ்ரீ பூர்ணசந்திராணந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.