புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4.30 மணி முதல் புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இதன்பிரகாரம் புத்தளம் பிராந்தியத்தின் புத்தளம், ஆனமடுவ, கற்பிட்டி, கருவலகஸ்வெவ, முந்தல், நவகத்தேகம, பல்லம, வண்ணாத்திவில்லு, உடப்பு, நுரைச்சோலை மற்றும் சாலியவெவ பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபம் பொலிஸ் பிரிவின் சிலாபம், தங்கொட்டுவ, கொஸ்வத்த, மாதம்பை, மாரவில, வென்னப்புவ மற்றும் ஆராச்சிகட்டு ஆகிய பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதனை தவிர நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் குறித்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கையையும் இடையூறின்றி மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.