தெற்காசியாவில் முதன்முறையாக சிறுவர் சிநேக மாநகர் மட்டக்களப்பில் உருவாக்கம்

0

தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் சிறுவர் சிநேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபையில் யுனிசெப் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையினை சிறுவர் சிநேகமிக்க மாநகரசபையாக மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகில் தென்கொரியாவில் உள்ள ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் இலங்கையிலும் மட்டக்களப்பு மாநகரசபை தெரிவு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி, அவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் அன்றாடம் விரும்பி மேற்கொள்ளும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

யுத்தம், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் என பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள காரணத்தினால் இந்த மாவட்டத்தினை தெரிவு செய்ததாக இங்கு கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவிலும், இலங்கையிலும் முதல் சிறுவர் சிநேக மாநகராக மட்டக்களப்பு மாநகரசபையினை மாற்றுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மணிவண்ணன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன், சிரேஸ்ட திட்ட வரைஞர் லூயிஸ் மொரீரா டானியல், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் வி.தர்சன, மாநகர ஆணையாளர் சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.