நாட்டின் வேறு பகுதிகளுக்கு ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம்?

0

தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் நாட்டின் வேறு பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடை, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

திவுலபிடிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் அவரது 16 வயதான மகள் ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெயாங்கொடை, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில், கொரோனா தொற்று பரவல் அடையாளப்படுத்தப்பட்டால், நாட்டின் வேறு பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் எனவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் ஊடாக வாகனங்களில் பயணிக்க முடியுமெனினும், வாகனங்களை நிறுத்த முடியாது எனவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.